இடுகைகள்

அவள்

 அவளின் முத்தான மூன்றெழுத்தில்  முடிவிலாக் கவி பிறக்கும்  அவளிடம் பேசப் பேச  அவள் தரும் பதில் பேச்சுகள்  மனதினை சில்லு சில்லாக நொறுக்கும்  அவளிடம் முத்தங்கள் கேட்டுக் கெஞ்சி நிற்பேன்  அவள் முத்தங்கள் தராமல் தூரம் நகர்வாள்  அச்சமயம் என் நாடிகளனைத்தும் உயிரிழக்கும்  உயிரிழந்த நாடிகளை உயிர்ப்பிக்க வருவாள் அவள்  என் மேனியெங்கும் நுகர்வாள்  நிஜத்தில் இல்லை கனவில் கல்நெஞ்சக்காரி  பாலும் தேனும் கலந்த சுவையை  இல்லை அதைவிட மிகுந்த சுவையை தருவாள்  அவள் வார்த்தைகளில் அந்த அழகுக்காரி  அவள் பின் திரிந்தவர்கள் ஏராளம்  அனுதினமும் அவளுக்கு வரும் கடிதங்கள் பலநூறு  அவர்களில் ஒருவனாகப் புலம்புகிறேன்  இன்று நீ என்னிடம் இருப்பது பெரிதல்ல  என் ஆயுள் முழுவதிலும் நீ என்னுடன் இருப்பாயாக  மேலும் பலர் கடிதமேந்தி உன்னிடம் வருவார்கள்  ஹைக்கூ கவிஞரென்றும் புதுமைக் கவிஞரென்றும் மரபுக் கவிஞரென்றும்  ஒருவேளை நீ அவர்களிடத்துச் சென்றால்  என் அன்பு கைக்கிளைக்கு  இடம்பெயரும்  அப்போது நான் மடலூர்ந்தால...

விடியலுக்காய் மடியும் இனம்

 தீந்தமிழ் கேட்டுத் திகட்டிய இடம் அந்நியன் வரவால் மாறியது தடம் மூத்தோர் தந்த முக்காணி நிலம் மூடன் குரலால் முடங்கிற்று பலம் உரிமை மீட்க எழுந்தன புலிகள்  போராடிப் போராடிப் பெற்றோம் வலிகள் வீரத் தமிழச்சிகள் வில்லினை ஏந்தினர் இனத்தினை காக்க எதற்கும் துணிந்தனர் முதுகில் குத்தி வீழ்த்தினர் நம்மை நாம் பழகியதோ வீரத்தின் செம்மை அரிய ஏடுகள் தீயில் கருகின வீரமுள்ள குருதி குழிகளில் வழிந்தன அண்டையில் வீற்றுள்ள அளவிலா சொந்தங்கள்  என்னாயிற்று கேட்க நாதியில்லா பந்தங்கள்  வெள்ளையன் தந்தான் அங்கீகாரம் அவர்களிடத்தில் அண்டைச் சகோதரனுக்கோ ஆட்சி மோகம் விடியலுக்காய் மடிந்தது நம்மினம் மீட்டெடுக்கப் பாடிடு தினமொரு கானம்                                  -கவிஞர்.   பெ.சக்திவேல்

கவிதைத் தலைப்பு -இன்று புதிதாய் பிறந்தோம்

 எதற்குப் பிறந்தோம் என எண்ண வேண்டாம்  எல்லாவற்றிற்கும் காரணம் உண்டு  அல்லும் பகலும் அயராது உழைத்து  அசதியில் தினம் தூக்கங்கள் போகும்  வாழ்வின் பாடம் இன்ப துன்பம் விலக வேண்டாம் எதிர்த்துத் துணிந்திடு  எண்ணங்கள் எங்கும் சென்று வரலாம்  எதார்த்தம் என்னவென்று புரிந்து செயல்படு  மேற்கில் உயரம் கிழக்கில் சரிவு  ஆற்றின் வாழ்வில் அறிந்த ஒன்று  மாலைகள் சூடி மகுடம் கொட்டிட  மாற்றம் என்பது நிச்சயம் வேண்டும்  நடக்க நடக்க காலும் தேயும்  கடக்க கடக்க பாதை பிறக்கும்  முட்கள் நிறைந்த இவ்வுலகினில் குத்தல் இன்றி செல்லப்பார்  காற்றின் திசை தடம் மாறும்  கலங்கல் இல்லா புயல் ஏது  புல்லாகப் பிறந்தால் மிதிபடுவோம்  விறகாகப் பிறந்தால் எரிக்கப்படுவோம்  மனிதனாகப் பிறந்தால் காயப்படுவோம்  நேற்று அனைவரும் தடுமாறி விழுந்தோம்  இன்றோ அனைவரும் புதிதாகப் பிறந்தோம்.

நாட்டுப்புறப்பாடல்-ஏர்

 ஓட்டுராங்கய்யா ஏரு ஓட்டுராங்கய்யா  மேல கீழ மண்ணு புரள மேற்கு தெச கொக்கு மெரள ஓட்டுராங்கய்யா ஏரு ஓட்டுராங்கய்யா  கைவுள்ள நெல்லுமணி காணாம போறதுக்கு  காட்டு கத்து கத்தி கிட்டு காகாவ விரட்றதுக்கு  ஓட்டுராங்கய்யா ஏரு ஓட்டுராங்கய்யா  அத்த பொண்ணு மாமன் பொண்ணு மொத்தம் சேந்து நாத்து நட சுத்தி சுத்தி வந்து கிட்டு மூஞ்சப் பாத்து  சிரிச்சிக்கிட  ஓட்டுராங்கய்யா ஏரு ஓட்டுராங்கய்யா  அத்த வந்து களை புடுங்க  அக்கா புருஷன் வரப்பு வெட்ட ஓட்டுராங்கய்யா ஏரு ஓட்டுராங்கய்யா  மாம வேர்வையில நெல்லு மொளைக்க  மாம தம்பி பொண்ணு சடங்கு கேக்க ஓட்டுராங்கய்யா ஏரு ஓட்டுராங்கய்யா.

தாய்த் தமிழே!

 தரணியும் தலைவணங்கும் தாய்த் தமிழே  தலைநிமிர்ந்து தழைத்தோங்கும் தனித்தமிழே செறுவிடை ஏந்தி நின்ற செழுந்தமிழே  செருக்குடன் மேலெழுந்த செந்தமிழே தீண்டத் தீண்டத் திகட்டாத தீந்தமிழே தீண்டல்கள் பெற்று வந்த தொல் தமிழே வஞ்சகம் உள்நுழையா வளந்தமிழே விருந்தினர் வியந்து போற்றிய மருந்தமிழே பல் சான்றோர் பாடித் தந்த பைந்தமிழே பல்லாண்டாய் படையலிடும் பழந்தமிழே நஞ்சினை விரட்டியடிக்கும் நறுந்தமிழே நன்றொரு சமூகம் தந்த நற்றமிழே பெதும்பைகள் பேணி வளர்த்த பூந்தமிழே  பெண்ணிற்கு மேன்மை தந்த பொன்தமிழே இளங்கவிகள் இணைந்து போற்றும் இளந்தமிழே இளங்கோவன் கையில் அமர்ந்த இன் தமிழே குறளெனும் குடை தந்த குறுந்தமிழே குவியலாய் குவிந்து கிடக்கும் முத்தமிழே கடலினுள் மூழ்கிக் கிடக்கும் குமரித் தமிழே காலத்தை வென்று நிற்கும் கன்னித்தமிழே உறவுகளை இழந்து தவிக்கும் ஈழத்தமிழே யாழிசை உணர்வளிக்கும் என் அருந்தமிழே!என் பெருந்தமிழே!

கடற்கரை

 கடலானது உன் பாதங்களைத் தொழ கலக்கமின்றி வந்து செல்லும்  சூரியன் சங்கமிப்பதை நீ பார்ப்பதை போல்  தமிழ் சங்கமித்ததை நீ பார்த்திருப்பாயா கடலினுள் சென்ற பரதவருக்காக நெய்தல் மகள் சிந்திய கண்ணீர் உன்னிடம் ஏராளம் ஏற்பாடு வேளையில் உன் மண்வாசம் தேன் சுவாசம் அங்கே சட்டியில் கொதிக்கும் கடல் மீனும் நெருப்பில் சுட்டுத்தள்ளிய கெளுத்திக் கருவாடும் என்றென்றும் அயலவர்க்கு அமிர்தமே! அலுப்பில் நிற்கும் படகுகளெல்லாம்  அண்டைப் படகை நலம் விசாரிக்கும் பங்காளி சண்டையிடும் மீன் வலைகள் பளபளப்பாக மாற்றி தந்திட கூச்சலிடும் வளைகாப்பு நடந்து முடிந்த நெய்தல் மங்கை வாயிலோரம் முகம் சுருங்கி நின்றிருப்பாள் இப்படியாக பற்பல எதிர்பார்ப்புகளை  ஏந்தி நிற்கிறது கடற்கரை.

இரவின் முகவரி

 சில மணிநேரம் கண் விழித்துப் பலனில்லை பல மணி நேரம் விழி மூடியும் தெரியவில்லை  எங்கு சென்றுள்ளாய் இரவே முகவரியினை வெளிச்சமாக காட்டு  ஓயாது உன்னை நினைத்திருப்பதால்   ஓய்விற்கு இங்கு இடமில்லை கானல் நீராய் காட்சி அளித்து பாலையில் மறைந்திருப்பாயோ கானகத்தில் கலந்திருந்தது மாலையில் புலப்படுவாயோ தீம்புனல் வாசம் வீச வைகறையில் வந்து நிற்பாயோ வரையிடம் வரம்பு மீற யாமத்தில் யாழிசைக்க காத்துள்ளாயோ உன் முகவரி எனக்கு வேண்டும்  உன்னிடம் பேச எனக்கு ஏராளம் தோன்றும் விருப்பத்துடன் விழைகிறேன் உன் முகவரிக்காக.